காதல் உவமை
July 23, 2013
விதவையாய் நின்ற வானவளை
விடியல்முதல் கண் சிமிட்டாமல்
கதிரவன் கண்டதாலே உண்மைக்
காதல் நெஞ்சிலுத்திட்டது போலும்,
இழந்தவாழ்வைத் திரும்பத் தரவெண்ணி
இளஞ் செஞ்சேலை ஆசையாய் கொடுத்து
குங்குமமாய் அவனே நெற்றிப்
பொட்டில் நின்றான்,
காதல் சின்னமாய்க் கண்ணாமூச்சியாட
காதலனுக்கு விட்டுக் கொடுப்பதாய்த் தன்
கண்ணைக் கறுப்புத் துணியால்கட்ட,
வெய்யோன் வயல் வரப்பின் மேலோடி,
வானுயர்ந்த மலை பின்னோடி ஒழிய,
காட்டிக் கொடுக்க அங்கே வந்த
விண்மீன் கூட்டத்தைத் துரத்தி
வெண்ணிலவங்கே அரணாய் நிற்க
விடுகதையாய் அவளுக்கு இரவோட,
அதிகாலை இன்னொரு சூரியன் உதிக்கையிலே,
அவனுக்கஞ்சி மேற்கே இருளோட – அங்கே
ஒளிந்திருந்த சூரியனை பாசமாய் சூழ
சூரிய வானக் காதலின் சுபம்!
அழியாக் காதலுக்கு ஊர் உவமையாய்!